search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்டு தொழிற்சாலை"

    • கடந்த ஒருவார காலமாக அமைதி வழியில் அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் போர்டு ஊழியர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும்.
    • அவர்களின் நியாயமான பணிபாதுகாப்புக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்று உறுதியளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மகிழுந்து உற்பத்தி செய்யும் போர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். நிர்வாகத்தின் இத்திடீர் முடிவால் அங்குப் பணிபுரியும் 2,638 நிரந்தர மற்றும் 16,000 மறைமுகத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    மறைமலைநகர் தொழிற்சாலை போன்றே, குஜராத்தில் உள்ள மற்றுமொரு தொழிற்சாலையையும் மூடப்போவதாக போர்டு நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், குஜராத் மாநில அரசு விரைந்து செயல்பட்டு 'டாடா' மகிழுந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிற்சாலை தொடர்ந்து இயங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்குப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்துள்ளதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அம்மாநில அரசு பாதுகாத்துள்ளது. ஆனால், அது போன்றதொரு பணி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தொழிலாளர்களின் நல்வாழ்வின் மீது தி.மு.க. அரசிற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

    எனவே, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கோரி, கடந்த ஒருவார காலமாக அமைதி வழியில் அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் போர்டு ஊழியர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கி, அவர்களின் நியாயமான பணிபாதுகாப்புக் கோரிக்கை வெல்லும்வரை துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×